26 November 2015

பயமாய் இருக்குதடி சிங்கி...


தன் காதல்மனைவி சிங்கியை சில நாட்களாகக் காணாமல் தேடியலைந்த சிங்கன், அவளை சந்தித்தவுடன் முதலில் மகிழ்ந்து ஆனந்தக்கூத்தாடுகிறான். அவளை உள்ளங்கால் முதல் உச்சிவரை பார்த்து ரசிக்கிறான். உடனே அதிர்கிறான். பயப்படுகிறான். அவன் அதிர்ச்சிக்கும் பயத்துக்கும் காரணம்அவள் உடலில் புதிது புதிதாய் என்னென்னவோ கிடக்கிறதேஅவள் கால்களைப் பார்த்தால் அதிலே விரியன்பாம்பு, நாக்குப்பூச்சி, செத்துப்போன தவளை, குண்டலப்பூச்சி போன்று ஏதேதோ தெரிகிறது.. இடுப்பிலொரு சாரைப்பாம்பு சுற்றிக்கிடக்கிறது.. அவளுடைய புடைத்த மார்பில் ஏதோ கொப்புளங்கள் தெரிகின்றன. அவள் கழுத்திலோ பத்தெட்டுப் பாம்புகள் பின்னிக்கிடக்கின்றன.. பயம் வராதா பின்னே? சிங்கனின் கேள்விகளைக் கேட்டு சிரிக்கிறாள் சிங்கிபல ஊர்களுக்கும் சென்று குறிசொன்ன அவளுடைய திறமைக்குக் கிடைத்த பரிசுகள் இவை என்றும் ஒவ்வொன்றும் என்னவென்றும் சிங்கனுக்கு விளக்குகிறாள்.. நமக்கு விளக்கம் தேவைப்படாத அந்த எளியப் பாடலை இப்போது பார்ப்போமா?




இத்தனை நாளாக என்னுடன் சொல்லாமல்
எங்கே நடந்தாய் நீ சிங்கி!
கொத்தார் குழலார்க்கு வித்தாரமாகக்
குறிசொல்லப் போனனடா சிங்கா!

பார்க்கில் அதிசயந்தோணுது சொல்லப்
பயமாய் இருக்குதடி சிங்கி!
ஆர்க்கும் பயமில்லைத் தோணின காரியம்
அஞ்சாமற் சொல்லடா சிங்கா!

காலுக்கு மேலே பெரிய விரியன்
கடித்துக் கிடப்பானேன் சிங்கி!
சேலத்து நாட்டிற் குறிசொல்லிப் பெற்ற
சிலம்பு கிடக்குதடா சிங்கா!

சேலத்தார் இட்டசிலம்புக்கு மேலே
திருகு முறுகென்னடி சிங்கி!
கோலத்து நாட்டார் முறுக்கிட்ட தண்டை
கொடுத்த வரிசையடா சிங்கா!

நீண்டு குறுகியும் நாங்கூழுப் போல
நெளிந்த நெளிவென்னடி சிங்கி!
பாண்டிய னார்மகள் வேண்டும் குறிக்காகப்
பாடக மிட்டதடா சிங்கா!

மாண்ட தவளைஉள் காலிலே கட்டிய
மார்க்கமதேது பெண்ணே சிங்கி!
ஆண்டவர் குற்றாலர் சந்நிதிப்பெண்கள்
அணிமணிக் கெச்சமடா சிங்கா!

சுண்டு விரலிலே குண்டலப்பூச்சி
சுருண்டு கிடப்பானேன் சிங்கி!
கண்டிய தேசத்திற் பண்டுநான் பெற்ற
காலாழி பீலி அடா சிங்கா!

மெல்லிய பூந்தொடை வாழைக்குருத்தை
விரிந்து மடித்ததார் சிங்கி!
நெல்வேலியார்தந்த சல்லாச் சேலை
நெறிபிடித் துடுத்தினேன் சிங்கா!

ஊருக்கு மேக்கே உயர்ந்த அரசிலே
சாரைப் பாம்பேது பெண்ணே சிங்கி!
சீர்பெற்ற சோழன் குமாரத்தி யார்தந்த
செம்பொன் அரைஞாணடா சிங்கா!

மார்பிற்கு மேலே புடைத்த சிலந்தியில்
கொப்புளம் கொள்வானேன் சிங்கி!
பாருக்குள் ஏற்றமாம் காயலார் தந்த
பாரமுத் தாரமடா சிங்கா!

எட்டுப் பறவை குமுறும் கமுகிலே
பத்தெட்டுப் பாம்பேதடி சிங்கி!
குட்டத்து நாட்டாரும் காயங் குளத்தாரும்
இட்ட சவடியடா சிங்கா!



(சுமார் இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் திரிகூடராசப்பக் கவிராயரால் இயற்றப்பட்ட திருக்குற்றாலக்குறவஞ்சியில் இடம்பெறும் இப்பாடல் வழியே அந்நாளையப் பெண்டிர் அணிகலன்களான சிலம்பு, தண்டை, பாடகம், கெச்சம், காலாழி, பீலி, பொன்னரைஞாண், முத்தாரம், சவடி போன்றவற்றைப் பற்றி சிங்கனோடு நாமும் அறிந்துகொண்டோம் அல்லவா?)

(படம் உதவி: இணையம்)

19 November 2015

சந்திரமதி (3)



பெண்களின் முகத்தைப் பொதுவாக தாமரை மலருக்கு ஒப்பிடுதல் இயல்புதிருமகள் உறையும் செவ்விதழ்கள் கொண்ட அழகிய தாமரையும், காக்கும் கடவுளான திருமாலின் உந்தியில் மலர்ந்ததும் படைப்புக்கடவுளான பிரம்மன் அமர்ந்திருப்பதுமான செந்தாமரையும்தான் தாமரை மலர்களுள் சிறப்பு வாய்ந்த மலர்களாம். அத்தகைய சிறப்புடைய மலர்களும் கூட மற்றொரு தாமரை மலரைப் பார்த்து நாணுகின்றனவாம். அப்படி நாணக்கூடிய அளவுக்கு அந்தத் தாமரையில் என்ன சிறப்பு இருக்கிறது? அந்தத் தாமரைக் கொடியில் தாமரையோடு முருக்கம்பூவும், ஆம்பலும், குவளைப்பூவும், குமிழம்பூவும் முல்லை அரும்பும் ஒன்றாக மலர்ந்து காணப்படுகிறதாம். வேறெந்த தாமரையிலும் இல்லாத சிறப்பல்லவா இது? அந்த அதிசயத்தாமரை எதுவென்றுதானே கேட்கிறீர்கள்? வேறொன்றுமில்லைஅது சந்திரமதியின் அழகிய முகம்தான். அவளுடைய இதழுக்கு முருக்கம்பூவும் இதழ் நறுமணத்துக்கு ஆம்பலும், கண்களுக்கு குவளையும், மூக்கிற்கு குமிழம்பூவும், பற்களுக்கு முல்லை அரும்புகளும் அவள் உடலுக்கு வள்ளைக்கொடியும் உவமைகளாகக் காட்டுகின்றார் புலவர்.. அவளுடைய முகம் பூத்த வியர்வைத் துளிகள் கூட தாமரையின் நறுந்தேன் போன்று மணம் கமழ்கிறதாம். என்னவொரு செறிவான கவிநயம்.. கற்பனை வளம்!

செருக்கும் மோகனச்செந் திருமகள் உறையும்
சேயிதழ்த் தாமரை மலரும்
பெருக்கும் மா மறைநூல் உரைத்த நான்முகத்தோன்
பிறந்த செங்கமலமும் வெள்க
முருக்கும் ஆம்பலும் மென்காவியும் குமிழும்
முல்லையும் வள்ளையும் மலர்ந்து
திருக்கிளர் கமலம் இதுவெனச் செவ்வி
திகழ் வெயர் செறி திரு முகத்தாள்.



முனிவர்கள் சந்திரமதியின் கொங்கைகளை வர்ணிக்கும் அழகைக் கேட்டால் அவர்களென்ன முற்றும் துறந்த முனிவர்கள்தானா என்ற சந்தேகம் நமக்கு ஏற்பட்டுவிடும். அப்படி என்னதான் சொல்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் பிறக்கிறதல்லவா? ஒரு கடினமான வேலையை செய்வதற்குமுன் அதைப் பற்றிய சிந்தனையே நம்முள் ஓடிக்கொண்டிருக்கும் அல்லவா? அப்படியொரு சிந்தனைதான் ஓடிக்கொண்டிருந்ததாம் படைப்புக்கடவுளான பிரம்மனுக்கும். எந்தக் கடின வேலையை முடித்தற்பொருட்டாம்?

சிவபெருமானின் கோபத்துக்கு ஆளாகி எரிந்துபோன மன்மதன் மீண்டுவந்தபோது அவனுக்குச் சூட்டுவதற்காக ஒரு கிரீடத்தைப் படைக்கப் போகிறார் பிரம்மன். அதற்காக தன் இருக்கையான தாமரை மலரை விட்டுச்சென்று நெடுநாள் தவமிருந்து தன்னிரு கைகளும் மனமும் வருந்தும்படியாக மன்மதனுக்கு கிரீடம் தயாரிக்கும் வேலையில் முனைகிறார். முதலில் யானையின் தந்தங்களையும் தொடர்ந்து கும்பத்தையும், சக்கரவாள மலையையும், வடக்கே உள்ள பொன்னாலான மலையையும் படைத்துத் தெளிந்தபின் படைத்ததாம் சந்திரமதியின் கொங்கைகள்அதாவது மன்மதனின் கிரீடத்துக்கு அவையே பொருத்தமாம்அந்த அளவுக்கு பூரணத்துவமும் வசீகரமும் நிறைந்தவையாம் அவைஅடேயப்பா.. என்னவொரு வர்ணனை!

இருப்பை விட்டு அயனார் நெடிதுநாள் தவம்செய்து
இரு கையும் சிந்தையும் வருந்திச்
செருப்பையின்று இறந்த மதனனைச் சூட்டத்
திருமுடி வேண்டுமென்று யானை
மருப்பையும் கும்பத் தலத்தையும் சக்ர
வாகத்தையும் வட கனகப்
பொருப்பையும் படைத்துத் தெளிந்தபின் படைத்த
புளகித பூரண முலையாள்.



சந்திரமதியைப் பற்றி புலவர்கள் அரிச்சந்திரனிடம் வர்ணிக்கும் அழகினை இதுவரை ரசித்துவந்தோம் அல்லவா? சந்திரமதியின் மார்பழகை வர்ணித்தாயிற்று.. அப்படியே இடைக்கு வந்தால் அடடா இடையழகை என்னவென்று சொல்வது? சந்திரமதிக்கு இடையென்று ஒன்று இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகத்தில் குழம்பிப்போயிருக்கிறார்கள் முனிவர்கள். அதை எப்படியெல்லாம் வெளிப்படுத்துகிறார்கள் பாருங்களேன். இவ்வளவு அழகு நிறைந்த சந்திரமதிக்கு இடை இருந்துவிட்டால் அந்த அழகால் அறமும், தவமும் ஏன் இந்த உலகமுமே நெறிதவறிப் போய்விடுமோ என்ற பயத்தால் பிரம்மன் அவளுக்கு இடையைப் படைக்கவில்லையோ என்று எண்ணும்படியாக உள்ளதாம். ஒருவேளை அவளுடைய அழகான வேல் விழியைப் படைத்த மாத்திரத்திலேயே கைகள் சோர்ந்து இடையைப் படைக்காமல் விட்டுவிட்டானோ? அல்லது அவளது அழகில் தானே திகைத்துத் தடுமாறி மதிமயங்கி இடையைப் படைக்க மறந்துவிட்டானோ? வெளிப்பார்வைக்குத் தெரியாமல் மறைவாய் வைத்திருக்கிறானோ? அல்லது சந்தனக்குழம்பு பூசிய அவளது கொங்கைகளின் பாரம் தாங்காமல் இடையானது உருகிக்கரைந்துபோயிற்றோ? இடையென்று ஒன்று இருக்கிறதா? இல்லையா? அல்லது இனிமேல்தான் படைக்கவேண்டுமோ? என்றெல்லாம் அவளுடைய இடையைப் பற்றிய ஆராய்ச்சிக் கேள்விகளோடு மன்னன் மனத்தில் மையலை ஏற்றுகின்றனர் முனிவர்பெருமக்கள்.

அறம் திகழ் தவமும் அகிலமும் இதனால்
அழியுமென்று அயன்படைத் திலனோ
சிறந்தவேல் விழியை முன்படைத்து அயர்ந்து
செங்கரம் சோர்ந்ததோ திகைத்து
மறந்ததோ கரந்து வைத்ததோ களப
வனமுலைப் பொறை சுமந் துருகி
இறந்ததோ உளதோ இல்லையோ இனிமேல்
எய்துமோ அறியொணாது இடையே.

இதைத்தான் நம் கவியரசர் தன் வரிகளில் சொல்கிறார். உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா வண்ணக்கண் அல்லவா இல்லையென்று சொல்வதுந்தன் இடையல்லவா மின்னல் இடையல்லவா என்று.




(தொடரும்)

15 November 2015

நந்தலாலாவில் நான் - தோழி மு.கீதாவுக்கு நன்றி




வலைதேடிவந்து தானேயதில் வீழ்ந்து
வசமாய் சிக்குவோர் வையகத்திலுண்டோ?

வலையில் வீழ்வோம் வாரீர் என்றே
வக்கணையாய் அழைப்போரைக் கண்டதுமுண்டோ?

அழைக்கிறாரே மு.கீதாவெனும் அன்பினாழி..
அகமெலாம் நிறைக்கும் அருந்தென்றற்றோழி…

நந்தலாலாவிலொரு வலைத்தொடர்க்கட்டுரை
நயமாய்த் தீட்டுகிறார் நல்லெழுத்துப்பட்டறை..

அறிமுகம்.. அடையாளம்… அங்கீகாரம்…
அவைதாமே எழுத்தின் வளர்ச்சிக்கு ஆதாரம்…

வலையெழுத்தை அறிவிக்கச் சொன்னதும்
வந்தேனாம் உடனே நினைவில் நானும்

நேயமிகு நட்புக்காய் நன்றிபல தோழி..
நற்பணி சிறப்புறவே வாழ்த்துகிறேன் வாழி..




வலைப்பூக்களைத் தொடர் அறிமுகம் செய்யும் 
நந்தலாலா.காம் இணைய இதழுக்கும் மிகவும் நன்றி. 
முதல் வலைப்பூவாய் கீதமஞ்சரியைத் தேர்ந்தெடுத்ததோடு 
வலைப்பூ துவங்கிய நாள் முதலாய் நானிட்டப் பதிவுகளை 
ரசித்தும் சிலாகித்தும் அடையாளங்காட்டியிருக்கும் தோழிக்கு 
அன்புகலந்த நன்றி..




அவருக்கான என் நன்றியுரை...

\\வலையெழுத்தின் தலையெழுத்தாய் கீதமஞ்சரியைத் தேர்ந்தெடுத்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி தோழி கீதா. பதிவுகளால் தங்கள் மனத்தில் இடம்பெற்ற மகிழ்வோடும் நிறைவோடும் தங்களுக்கும்  என்னைத் தொய்வின்றி எழுதவைத்துக் கொண்டிருக்கும் பதிவுலக நட்புள்ளங்களுக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்

வலைப்பூ துவங்கிய நாளாய் என் பதிவுகளை வாசித்துக் கருத்திட்டு சிறப்பித்ததோடு, அவற்றை இங்கே தாங்கள் அழகாக அடையாளங்காட்டியுள்ளமை என்னெழுத்தை வளப்படுத்துவதாகவும் மென்மேலும் எழுதும் ஊக்கத்தை வளர்ப்பதாகவும் உள்ளது.

சென்றிடுவீர் எட்டுத்திக்கும்.. கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்னும் பாரதியின் வரிகளுக்கேற்ப, என்னால் இயன்றவரை நான் சார்ந்துவாழும் நாடு குறித்தப் பல்வேறு தகவல்களையும் தமிழுக்குக் கொணர்ந்து கொண்டிருக்கிறேன்.

இத்தகு அங்கீகாரங்களாலும் அன்பின் ஊக்கத்தாலும் அப்பணி இனியும் இனிதே தொடரும் என்று உறுதியளிக்கிறேன். தங்களுக்கும்  நந்தலாலா இதழுக்கும் என் மனங்கனிவான நன்றி.\\


14 November 2015

சந்திரமதி (2)


அரிச்சந்திரபுராணம் விவாக காண்டத்திலிருந்து சந்திரமதி குறித்தான சில வர்ணனைப் பாடல்களை ரசித்துக்கொண்டிருக்கிறோம். முதல் பதிவில் சந்திரமதி அறிமுகம், குணம், கூந்தல் அழகு பார்த்தோம். இப்பதிவில் அவளுடைய குரலினிமையும் விழியழகும் பார்க்கவிருக்கிறோம். 



இனிமைக்கு உதாரணமாக உலகு சொல்லும் அத்தனையையும் சந்திரமதியின் குரலுக்கு இலக்கணமாய் ஒற்றைப்பாடலுக்குள் கொண்டுவந்துவிடுகிறார் புலவர். பச்சைக்கற்பூரம், பால், தேன், அமுதம், குயிலின் குரல், கிளியின் இனிமையான மொழி, குழல், யாழ் என்று இந்த உலகில் இனிமை தரக்கூடிய அத்தனைப் பொருட்களையும் ஒன்றுகுழைத்து, மயிலைப்போன்ற சாயலையுடைய சந்திரமதியின் இனிய குரலாக அந்த பிரம்மன் படைத்தானாம். இந்த வரிகளிலிருந்து சந்திரமதியின் குரலினிமை தெரிகிறது. அவளுடைய குரலின் தன்மை எப்படிப்பட்டதாம் தெரியுமா? அவளுடைய குரலைக் கேட்டால் கருகிய பயிர்களும் உயிர்பெற்று பசிய பயிர்களாகுமாம். பட்ட மரம் தழைத்திடுமாம்பலநாள் மண்ணில் கிடந்து மக்கிப்போன பிரேதத்தின் மீந்துகிடக்கும் வெண்ணிற எலும்புகளும்கூட புத்துயிர் பெற்று எழுந்துவிடுமாம். போதுமா இந்த வர்ணனைகள் என்னும்படியாக எவ்வளவு எவ்வளவு வர்ணனைகள்

பயிர்கள் தீந்தனவும் பட்ட மா மரமும்
பண்டைநாள் உக்க வெள் என்பும்
உயிர்பெறற் பொருட்டுப் பளிதமும் பாலும்
ஒழுகிய தேனும் ஆரமுதும்
குயிலினிற் குரலும் கிளியினின் மொழியும்
குழலும் யா ழும் குழைத் திழைத்து
மயிலியற் சாயல் வாள்நுதல் தனக்கு
மலரயன் வகுத்தது என் மொழியாள்.



சந்திரமதியின் மொழியழகு பார்த்தாயிற்று.. அடுத்து விழியழகு பார்ப்போமா? சந்திரமதியின் கண்கள் எப்படிப்பட்டவை தெரியுமா? பொதுவாக கவிஞர்கள் ஒரு பெண்ணின் கண்களுக்கு உவமையாகக் கூறக்கூடிய பொருட்கள் என்னென்ன? கடல், மீன், அம்பு, மருண்ட பெண்மான், நீலோற்பல மலர், கருவிளம்பூ, மாவடு போன்றவை. ஆனால் இவை யாவற்றையும் வென்றுவிடக்கூடிய அழகு வாய்ந்தவையாம் சந்திரமதியின் கண்கள். கண்களின் அழகைப் பார்த்தோம். அதன் தீவிரம்? உயிர்பறிக்கும் கொடிய எமனையும், எவரையும் சிக்கவைக்கும் வலையையும், கொன்று கூறுபோடும் வாளையும் வெல்லக்கூடிய வன்மை அக்கண்களுக்கு உண்டாம். அக்கண்களின் நீளம் எவ்வளவு தெரியுமா? குமிழம்பூ போன்ற மூக்கையும், காதணியாடும் காதுகளையும் மாறி மாறி சீறும் அளவுக்கு நீளமாம். நிறம்? அரவம் தீண்டி விடமேறியது போன்ற கருநிறமாம்.

கடலினைக் கயலைக் கணையைமென் பிணையைக்
காவியைக் கருவிள மலரை
வடுவினைக் கொடிய மறலியை வலையை
வாளைவேன் றறவுநீண் டகன்று
கொடுவினை குடிகொண் டிருபுறம் தாவிக்
குமிழையும் குழையையும் சீறி
விடமெனக் கறுப்புற் றரிபரந் துன்கை
வேலினும் கூரிய விழியாள்.





(தொடரும்)
படங்கள் உதவி: இணையம்