21 November 2014

தவறிய கணிப்பு (ஆஸ்திரேலிய காடுறை கதை)

முதியவர் ஜிம்மியை அந்த வட்டாரத்தில் அனைவரும் அறிவர். போஸம் வாய்க்கால் பகுதியில் முதன்முதலில் குடியேறியவர்களுள் அவரும் ஒருவர். அவருடைய சுரங்கநிலப்பகுதியும் வளமானதாகவே இருந்தது. ஆனால் கிடைத்த தங்கத்தை அவர் என்ன செய்தார் என்பது ஒரு பெரிய மர்மமாகவே இருந்தது. அவர் எதையும் விற்றதாகவும் தெரியவில்லை.
அவர் எப்போதும் கடுகடுத்த முகத்துடனும் பரட்டைத்தலையுடனும் நைந்த அழுக்கு உடைகளுடனுமே காணப்பட்டார். அவரிடம் பேசுவதும் பன்றியுடன் பேசுவதும் ஒன்று என்று எண்ணத் தோன்றுமளவு பன்றியின் உறுமலையே பதிலாகத் தருவார். அவர் தூங்கி எவரும் பார்த்ததில்லை. அவருக்கு ஒரே ஒருநண்பன்இருந்தான்.  

மழைநாளின் கரிய இரவொன்றில் ஃப்ரான்க், பில்லி இருவரும் தங்கத்தைத் தேடி ஜிம்மியின் மரக்குடிலுக்குள் நுழைய முயன்றபோது துப்பாக்கி வெடிச்சத்தமும், உரத்த ஏச்சுகளும் கேட்டு பயந்து பின்வாங்கினர். அவர்கள் திரும்பிச்செல்லும்போது ஜிம்மி தனக்குத்தானே சிரித்துக்கொள்ளும் சத்தம் கேட்டது.

சிலகாலத்துக்குப் பிறகு கலப்பின சீனன் ஒருவனுடைய துணையுடன் மறுபடியும் ஜிம்மியிடம் தங்கள் கைவரிசையைக் காட்டத் திட்டமிட்டனர். ஜிம்மியின் கவனத்தை வீட்டின் பின்பக்கத்துக்கு திசை திருப்புவது சீனனின் வேலை. அப்போது மற்ற இருவரும் வீட்டின் முன்பக்கத்தில் நுழைந்து தாக்குவதாக ஏற்பாடு.

அதிசயமாக அன்று அந்த முதிய சுரங்கத்தொழிலாளி அசந்து தூங்கிக்கொண்டிருந்தமையால் சத்தமெழுப்பாமல் அவர்கள் வீட்டின் வாசல்வரை வந்திருந்தனர். திடீரென்று அந்த இரவின் அமைதியைக் கிழித்துக்கொண்டு அதிபயங்கர வீறிடலொன்று குடிசையின் பின்பக்கத்திலிருந்து வந்தது. முன்பக்கம் காத்திருந்தவர்கள் பயந்துபோய் ஓடிவிட்டனர்.

மறுநாள் காலையில் ஜிம்மி அந்த சீனனை காவலதிகாரியின் முகாமுக்கு தரதரவென்று இழுத்துக்கொண்டு வந்திருந்தார். இதுபோன்ற ஆபத்து சமயங்களில் உதவுவதற்காக யானை பிடிக்கும் பள்ளம் போன்ற ஒன்றை தன் வீட்டுக் கொல்லைப்புறத்தில் வெட்டி, உள்ளே உடைந்த கண்ணாடி பாட்டில்களைப் போட்டு மேலே இலைதழைகளால் மூடி வைத்திருந்திருக்கிறார் அவர். இந்த சம்பவத்துக்குப் பிறகு ஜிம்மியிடம் களவாட எவரும் எந்த வழியிலும் முயற்சி செய்யவில்லை. அவரும் நிம்மதியாக இருந்தார்

கொஞ்சநாள் கழிந்தபிறகு, பணியிடத்தில் ஒருவார காலமாக அவர் தென்படாத காரணத்தால் சிலர் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு அவரைத் தேடி அவருடைய பழைய குடிசைக்கு வந்தனர். அது வெறுமையாயிருந்தது. கணப்படுப்பில் சாம்பல் குளிர்ந்துபோயிருந்தது. ஜிம்மியின் படுக்கையில் நைந்து கிழிந்த போர்வையின் மேலே ஜிம்மியின் ஒரே நண்பனானஇருளன்முதுகொடிந்து கிடந்தது. இருளன் என்பது, ஜிம்மியின் குடிசையின் கதவுக்குக் கீழே உள்ள பொந்தில் வசிக்கும், சிவந்த அடிப்புறத்தைக் கொண்ட ஒரு பெரிய கருநாகம். முதியவர் ஜிம்மி மாலைவேளைகளில் குடிசைக்கு வெளியிலமர்ந்து கான்செர்ட்டினா இசைக்கருவியை இசைக்கும்போது இருளனும் வெளியே வந்து அவரோடு அமர்ந்து ரசிப்பது வழக்கம்.

ஜிம்மி இப்போது எங்கு போயிருப்பார் என்று தெரியவில்லை. மதிப்புள்ள பொருட்கள் எதையும் காணவில்லை, வெள்ளியினாலான பழைய கைக்கடிகாரம் ஒன்றைத்தவிர. ஜிம்மிக்கு விருப்பமான அதை அவர் தெரிந்தே அங்கு விட்டுச்சென்றிருக்க வாய்ப்பில்லை.

காலம் செல்லச் செல்ல போஸம் சுரங்கப்பகுதி வளம் குன்றிப்போனதால் அங்கு சுரங்கத்தொழில் கைவிடப்பட்டது. அதற்குப் பிறகு, பழைய சுரங்கப்பள்ளங்களில் மண்ணைக் கிண்டிக்கிளறி ஏதேனும் மிச்சமீதி இருக்கிறதா என்று தேடிப்பார்த்து அதன்மூலம் வயிற்றுப்பாட்டுக்கு ஏதேனும் வழிதேடும் ஒருசிலர் மட்டுமே காணப்பட்டனர்

அப்படிப்பட்டவர்களுள் ஒருவனான அயர்லாந்துக்காரன் டிப்புக்கு ஒரு யோசனை தோன்றியது. அவன், ஜிம்மி தன் சொத்துக்களான தங்கக்கட்டிகளை இங்கேதான் எங்கேயோ ஒளித்துவைத்திருக்க வேண்டும் என்று உறுதியாக நம்பினான். அவற்றைத் தேடும் முயற்சியில் இறங்கினான். அந்த பாழாய்ப்போன பாம்பு அவரைக் கடித்திருக்கும். அவர், தான் சாவதற்கு முன் தன் பொக்கிஷத்தை எங்காவது புதைக்க எடுத்துக்கொண்டு போயிருப்பார். அதிக தூரம் அவரால் போயிருக்கமுடியாது.” இதுதான் டிப்பின் எண்ணம். அதைக் கேட்டு அவனுடைய நண்பர்கள் அவனைக் கேலி செய்தனர். ஆனாலும் அவர்களை அலட்சியப்படுத்திவிட்டு, ஒற்றையாய் நிற்கும் ஜிம்மியுடைய இத்துப்போன பழைய குடிசையில் அவனும் அவனுடைய பெரிய வளர்ப்புப்பூனை செசிலியாவுமாக குடியேறினர்.

ஏற்கனவே புதையல் தேடிவந்தவர்களால் குடிசையின் தரை முழுவதும் இரண்டடி ஆழத்துக்கு தோண்டப்பட்டிருந்தது. டிப் இன்னும் ஆழமாகத் தோண்டினான். எதுவும் அகப்படவில்லை. அவன் தன்னுடைய முந்தைய எண்ணமே சரியென்று முடிவு செய்தவனாய் வெளியில் சென்று தேடலானான். தன்னுடைய எண்ணத்தில் தீவிரமாகி அதன்மூலம் கற்பனைகளை வளர்த்து கடந்தகால நிகழ்வுகளை ஒத்திகை செய்துபார்த்தான். படுக்கையில் படுத்திருக்கிறான். பாம்பு கடித்துவிட்டது. சட்டென்று எழுந்து யோசிக்காமல் ஏதோ ஒரு திசையில் ஓடுகிறான். இப்படிப் பலமுறை பரீட்சித்துப் பார்த்தும் பலனில்லை.

பல இரவுகள் கணப்படுப்பின் அருகில் அமர்ந்தபடி டிப் தனக்குத்தானே அல்லது தன் ஒரே துணையான பூனையிடம் பேசிக்கொண்டிருப்பான். ஜிம்மி எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு ஊரைவிட்டு ஓடுவதாக இருந்தால் ஏன் அந்த கைக்கடிகாரத்தை மட்டும் விட்டுவைக்கவேண்டும். உலகமே அதில்தான் அடங்கியிருப்பது போல் எண்ணியவர், எப்படி அதை மறந்துபோயிருப்பார்? திருடர்களுக்கு பயந்து எங்கோதான் அவற்றை மறைத்து வைத்திருக்கவேண்டும்.

அவன் ஆர்வமிழந்துகொண்டிருந்த சமயத்தில், ஒருநாள் இரவு செசிலியா எதையோ வீட்டுக்குள் கொண்டுவந்து விளையாடிக்கொண்டிருந்தது. அது பல சமயம் பல்லி, எலி, பறவைகள், பாம்புகள் போன்றவற்றைக் கொண்டுவருவதுண்டு. இது அந்தவகையைச் சேர்ந்ததாக இல்லை.
இது ஒரு மனித எலும்புக்கூட்டின் கைப்பகுதி. காய்ந்து உலர்ந்த தசைகளுக்குள்ளே தளர்ந்த மூட்டுகளுடன் தொய்ந்து கிடந்தது

டிப் அதை எடுத்துப் பார்த்து இன்னதென்று உணர்ந்தநொடியே சொன்னான், “பிரமாதம், செசிலியா. என் செல்லமே. இதை நீ எங்கேயிருந்து எடுத்துவந்தாயென்று என்னிடம் காட்டினால் நீ உன் வாழ்க்கை முழுவதும் அழகிய ஊதாநிற லினன் படுக்கையில் படுத்துக் கிடக்கலாம். உன்னை யாரும் விரட்டமாட்டார்கள். இதைப் பார்த்தால் ஜிம்மியின் உடலுறுப்பைப் போலத்தான் இருக்கிறது. நான் அவனுடைய கால்களையும் பார்க்கவிரும்புகிறேன். வா, வந்து இடத்தைக் காட்டு.”

ஆனால் செசிலியாவோ சன்னமாய் ப்ப்ப்ர்ர்ர்…’ என்று ஒலியெழுப்பியபடி தன் பெரிய பச்சைக்கண்களால் அவனை ஏறிட்டுக்கொண்டு தன் கரிய உடலை அவனுடைய கால்களோடு உராய்ந்தபடி நின்றுகொண்டிருந்தது.
பிறகு ஒருவார காலத்துக்கு, டிப் பூனையைப் பின்தொடர்ந்து சென்று கண்காணித்தான். அவன் தொடர்வதை அறிந்துகொண்ட அது, தனக்குப் பிடித்தமான வேட்டைக்களங்களை அவனுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி கொண்டது.

ஓடையிலிருந்து தண்ணீரைக் குடிசைக்குக் கொண்டுவரும் பழக்கத்தால்  ஓடைக்கும் குடிசைக்கும் இடையே ஒற்றையடிப்பாதை ஒன்று உருவாகியிருந்தது. பாதி வழியில் ஒரு பெரிய உள்ளீடற்ற மரமொன்று கிடந்தது. இரண்டு வாளி நிறையத் தண்ணீரை எடுத்துக்கொண்டு வரும் டிப் அந்த மரத்தோரம் தன் பாரத்தை இறக்கிவைத்து சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்வான்அது யூகலிப்டஸ் இனங்களுள் ஒன்றான கூலபா மரம். பருத்த வயதான அம்மரம் காட்டுத்தீயினால் சிதைக்கப்பட்டு வேரோடு சாய்ந்திருந்தது. அடிமரத்தண்டின் கூடு கிடைமட்டமாகக் கிடந்தது. ஒருநாள் அதன் உள்ளேயிருந்து செசிலியா ஒரு எலும்புத்துண்டைக் கவ்வியபடி வெளியில் வந்ததைப் பார்த்தவன் உற்சாகமிகுதியால் கத்திக்கொண்டு குனிந்து உட்பக்கம் உற்றுப்பார்த்தான். அந்தக் கருந்துளைக்குள் அவனால் எதையும் பார்க்கமுடியவில்லை என்றபோதும் அதிர்ஷ்டம் நெருங்கிவிட்டதை உணர்ந்தான்.

ஒரு பெரிய கழியின் நுனியில் மொத்தமான வளைந்த கம்பியொன்றைக் கட்டி கொக்கி போலாக்கி அதை மரத்திற்குள் செலுத்தி உள்ளே அங்கும் இங்கும் அசைத்தான். கொக்கியில் ஏதோ சிக்கியதைப்போல் உணர்ந்தான். பலமாய் வெளியில் இழுக்க, ஜிம்மியின் உடல் அல்லது ஜிம்மியின் மிச்சமீதிகள் வெளியே வந்தன ஆனால் வெறுங்கையுடன். “ச்சேஒரு மூட்டை எலும்புகள்தான்.” டிப் அலுத்துக்கொண்டான்.

மேலும் ஒருமணி நேரத்தை செலவழித்து அங்கு வேறு ஏதாவது கிடைக்கிறதா என்று கொக்கி போட்டு ஆராய்ந்தும் பயனில்லை. இறுதியில் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தான். தவழ்ந்த நிலையில் உள்ளே சென்றவனுக்கு அதன் சுற்றுப்புற இறுக்கமும் நாசியருகே வீசும் துர்வாடையும் தாங்கமுடியாததாக இருந்தன. தன்னால் மீண்டும் வெளியே வர இயலாவிடில் என்னாவது என்ற நினைவு தோன்றியவுடன் குபீரென்று வியர்த்துக்கொட்டி நனைந்துபோனான்

அதீத பயம் மேலிட, அவன் ஊர்வதை நிறுத்தினான். அந்த மரத்துளையானது ஒரு மனித உடலை சரியாய் இறுக்கிப்பிடிப்பதற்கு ஏதுவாக செதுக்கிவைத்தாற்போன்ற கற்பனை விரிய, அவன் உடல் அதில் சிக்கிக்கொண்டாற்போல் தோன்றியது. மரத்தின் எரிந்து கருகிய கரிக்கட்டைகளைக் கைகளால் பெயர்த்தெடுத்துப் போதுமான வழி உண்டாக்கி பின்புறமாய் வெளியேற முயன்ற வேளையில், அவன் காதருகில் சன்னமான மியாவொலிகள் கேட்டன. பின்னால் செசிலியாவின் பதில் மியாவொலி.. செசிலியாவின் குட்டிகள் இங்கிருக்கின்றன.

அடுத்த நொடி செசிலியா அவன் உடலோடு உரசி நடந்து அவனுக்கு முன்னால் வந்து நின்றது. கையெட்டும் தொலைவில் அதனுடைய கண்கள் ஒளிர்ந்துகொண்டிருந்தன. ஒரு மாயாஜாலம் போல அவன் அப்போது உணர்ந்தான். பூனைக்கு வழிவிட தன்னிச்சையாக உடல் ஒடுங்கியதாலோ என்னவோ, இப்போது முன்னே ஊர்ந்துசெல்ல போதுமான இடம் கிடைத்திருந்தது.

அவன் மேலும் ஊர்ந்து முன்னேறி கைகளால் துழாவியபோது, புழுபுழுத்துப்போன ஏதேதோ சின்னச்சின்ன உயிரினங்கள் அகப்பட்டன. செசிலியா தன்னுடைய முரட்டு நாவால் அவன் கைகளை நக்கியது. வேறொன்றும் அவன் கைகளுக்குத் தட்டுப்பட்டது. கனமான, கடினமான ஒரு உணவுப்பொருள் டின்னைப் போன்று இருபக்கமும் மூடப்பட்டிருந்தது அது.

மீண்டும் வெளியே வருவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. ஒருவழியாக வெளியேறியவன் தலை முதல் பாதம் வரை கரியும் சாம்பலுமாகக் காட்சியளித்தான். கையிலிருக்கும் டின்னைப் பார்த்து வியந்தான். அது ஒரு பதப்படுத்தப்பட்ட மாட்டுக்கறி அடைத்த டின். அதன் ஒரு பக்க தகர மூடி ஓரங்களில் கொஞ்சமாய் திறக்கப்பட்டு, மீண்டும் மூடப்பட்டு தோல்வாரால் இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்தது. நாலரை கிலோ கொள்ளளவு உள்ள அந்த டின்னைத் திறந்து பார்த்தபோது அதன் விளிம்பு வரை சுத்தமான தங்கப்பொடியும் கட்டிகளுமாக இருந்தன. இதுதான்.. இதுதான் ஜிம்மியின் பொக்கிஷம்!

மீண்டும் ஜிம்மியின் உடலை அந்தப் பொந்துக்குள் தள்ளிவிட்டு சொன்னான், “உனக்கு வேறு யாரும் இல்லாததால் இதுதான் உனக்கு சவப்பெட்டி. உன்னுடைய இந்த யோசனையால் இரண்டு வருடங்களாக என்னை அலையவைத்துவிட்டாய். மறுபடியும் உள்ளே போய் செசிலியாவுக்கும் அதன் குட்டிகளுக்கும் விளையாட்டுக் காட்டு!”

டிப் அப்போதைய தேவைக்கேற்ப கொஞ்சம் தங்கத்தை மட்டும் எடுத்துக்கொண்டு நகரத்துக்குப் புறப்பட்டான். மிச்சத்தை அப்படியே டின்னோடு ஒரு குழி தோண்டிப் புதைத்தான். பாதிவழி சென்றவனுக்கு ஏதோ சந்தேகமும் பயமும் தோன்ற, திரும்பிவந்து புதைத்ததை எடுத்து வேறு இடத்தில் பதுக்கிவைத்தான். கிடைத்த புதையலைத் தவறவிட்டுவிடுவோமோ என்ற பயத்தில் இன்னும் பலமுறை இடங்களை மாற்றினான்.   

நகரத்தை அடைந்த பின்னர் ஜாம்பரூ பள்ளத்தாக்கு சென்று ஒருவார காலத்தை மகிழ்ச்சியுடன் களித்தான். அடுத்த செலவுக்கான பணத்துக்கு ஏற்பாடு செய்ய தங்கத்தை எடுக்க வந்தபோது பதுக்கிய இடத்தை மறந்துபோயிருந்தான். தோன்றிய இடத்திலெல்லாம் தேடிப்பார்த்தும் அது கைக்கு அகப்படவே இல்லை.

கடைசியாக நம்பிக்கையிழந்த நிலையில் நடந்த கதை முழுவதையும் பாதிரியாரிடம் சொல்லி, ஜிம்மியின் எலும்புகளை உரியமுறையில் கல்லறையில் புதைக்க ஏற்பாடு செய்தான். இந்தப் பரிகாரத்துக்குப் பிறகும் அவனால் தங்கம் புதைத்த இடத்தைப்பற்றிய நினைவுகளை மீட்டெடுக்க இயலவில்லை.

அவன் இன்னமும் சொல்லிக்கொண்டிருக்கிறான், “முடிந்துபோன விஷயம் என்றாலும் நடந்தது நடந்ததுதான். தங்கம் கைக்குக் கிடைத்த பிறகும் ஜிம்மியின் உடலை உரிய மரியாதையோடு அடக்கம் செய்யாமல் எள்ளலும் ஏளனமுமாக அலட்சியப்படுத்தினேன். ஒருவனுடைய தவறான கணிப்புகள் அவனை எந்த நிலைமையில் கொண்டுவந்து நிறுத்துகின்றன?”

&&&&&&&&&&&&&&&&


மூலக்கதை ஆசிரியர் குறிப்பு – இங்கிலாந்தில் பிறந்த ஜான் ஆர்தர் பேரி (1850 -1911) சிறுவயதிலேயே தாய்தந்தையை இழந்தவர். தனது பதிமூன்றாவது வயதில் கடல் வாணிபப் பயிற்சியில் இணைந்த அவர், பன்னிரண்டு ஆண்டுகள் பணியாற்றியபின் அனுபவச் சான்றிதழ் பெற்று வெளியேறினார். ஆஸ்திரேலியாவுக்கு வந்து தங்கச்சுரங்க வயல்களில் தன் அதிர்ஷ்டத்தை தேடினார். சில வருடங்கள் கால்நடைகளை மேய்த்தும், எல்லைக் காப்பாளனாகவும், பண்ணை நிர்வாகியாகவும் பணியாற்றினார். இடையிடையே கடல்வழி வர்த்தகங்களிலும் ஈடுபட்டு கடற்பயணம் மேற்கொண்டார். தன்னுடைய கடற்பயண அனுபவங்களின் அடிப்படையில் பல சிறுகதைகளையும் புதினங்களையும் எழுதினார். அவை ஆஸ்திரேலிய பத்திரிகைகளில் வெளியாயின. அவற்றைத் தொகுத்து புத்தகங்களாக வெளியிட்டார். தனது அறுபத்தொன்றாம் வயதில் இதயக்கோளாறு காரணமாக சிட்னியில் இறந்தார். அவர் இறந்தபின்னும் அவரது சில படைப்புகள் புத்தகமாக்கம் பெற்றன. 

படங்கள் : நன்றி இணையம்.

11 November 2014

துளிர் விடும் விதைகள் என் பார்வையில்...
துளிர் விடும் விதைகள் – கவிதைத்தொகுப்பை இப்போதுதான் வாசித்து முடித்தேன். தோழி கிரேஸின் தமிழார்வம் எப்போதுமே என்னை மிகவும் வியக்கவைக்கும். ஐங்குறுநூற்றுப் பாடலில் வரும் களவன் என்ற சொல்லுக்கான சரியான பதத்தை அறிந்துகொள்ள அவர் எடுத்த முயற்சிகள் வியப்பின் உச்சத்துக்கே என்னை அழைத்துச்சென்றன. ஆங்கிலத்திலும் தமிழிலுமாய் சங்க இலக்கியப் பாடல்களை அவர் தெளிவுற விளக்கும் பாங்கு என்னை அவரது பதிவுகளின்பால் பெரும் ஆர்வம் கொள்ளச் செய்திருந்தது. அவருடைய கவிதைகளைத் தவறாமல் வாசிக்கவும் தூண்டியது.

தோழி கிரேஸின் கவிதை நூல் வெளியீடு நடைபெறுவது அறிந்து மகிழ்ந்தேன். என் வாழ்த்துகளை மானசீகமாக அனுப்பிவைத்துவிட்டு என் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்த ஒருநாளில் கிரேஸிடமிருந்து தகவல் வந்தது. இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அவர் அமெரிக்கா கிளம்புவதாகவும் எனக்கு அவரது நூலின் மின்னூல் வடிவத்தை அனுப்பிவைப்பதாகவும் தெரிவித்திருந்தார். இவ்வளவு பணிகளுக்கிடையில் என்னை நினைவில் வைத்திருந்து அனுப்பிய அவரது அன்பைக் கண்டு நெகிழ்ந்துபோகிறேன். அவரது கவிதைகள் முன்பே பரிச்சயம் என்றாலும் ஒரு தொகுப்பாய் வாசிப்பது மாறுபட்ட அனுபவம்தான்.

கவிதை நூலுக்கு அழகும் சிறப்பும் சேர்க்கின்றன கவிஞர் முத்துநிலவன் ஐயா எழுதிய அணிந்துரையும், திரு. ராஜவேல் நாகராஜ் அவர்களுடைய முகவுரையும் முனைவர் எம்.ஏ.சுசீலா அவர்களுடைய  முன்னுரையும் கிரேஸின் தன்னுரையும்.

மாதா பிதா குரு தெய்வம் என்பார்கள். இங்கு தோழியோ மாதா பிதாவுக்கு முன்னால் தமிழ்த்தாயை வணங்கித்தான் பாக்களைத் துவங்கியிருக்கிறார். அன்னை தந்தையை அந்தந்த தினங்களில் வாழ்த்துவது அன்னை தந்தையின் அன்புக்கும் அவர்களுடைய ஆயுட்கால உழைப்புக்கும் முன்னால் வெகு சிறியதே என்கிறார்.

தந்தையின் அன்பைப்பற்றிக் குறிப்பிடும்போது

சூரியனுக்கு ஒரு சுடர் தருவதா?
கடலுக்கு ஒரு துளி தருவதா?

என்று கேட்கிறார். சூரிய அளவு அன்பைப் பெற்று சுடர் அளவு திருப்பித் தருகிறோம் என்னும் சிந்தனை எவ்வளவு வலியது. ஆனால் தாயின் அன்பைக் குறிப்பிடுகையில் என்ன சொல்கிறார் பாருங்கள். 

அளவிட முடியாத அவள் அன்புக்கு முன்
நன்றியில் அடைக்கமுடியாத அவள் அன்புக்கு முன்
வணங்குகிறேன் நேசிக்கிறேன்
அவள் அன்புக்கு முன் –
என்ன செய்தாலும் நிகராகாது அன்றோ?

முதலில் தமிழைப் போற்றி, தொடர்ந்து தாய் தந்தையை வணங்கி அடுத்த அற்புத உறவாய் நட்பைப் பாடி நம் நெஞ்சம் நிறைத்துவிட்டார்.

நண்பர் தினம் ஓர் தினம் ஆனாலும்
நண்பருடன்தான் அனைத்து தினமும்

என்கிறார் நட்பு இல்லையேல்.. கவிதையில்.

இயற்கை, சமூகம், வாழ்வியல் குறித்தான அக்கறை கிரேஸின் ஒவ்வொரு கவிதையிலும் வெளிப்படுவது சிறப்பு. மழையின் சார்பாக, மரங்களின் சார்பாக, நீரின் சார்பாக, நிலத்தின் சார்பாக என இயற்கையின் இருப்புகள் அனைத்தின் சார்பாகவும் பேசுகிறார். ஆதங்கம், ஆற்றாமை, குமுறல், கோபம், கெஞ்சல் என்று பல்லுணர்வுக் கலவையாய் தன்னுணர்வுகளை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்க்கிறார்.

ஓவியத்திலா காட்டவேண்டும்? என்ற கவிதையில்…

அறியாயோ? கண்ணைத் திறவாயோ மனிதா? – உன்
சந்ததிக்கு எம்மை ஓவியத்திலா காட்டவேண்டும்?
தோலிற்கு எம்மையும், மரத்திற்கு காட்டையும்
பேராசைக்கு இயற்கைச் சூழலையும் பலியாக்காதே!

எந்த விலங்கினத்தின் பார்வையில் எழுதப்பட்டது என்பது கவிதையின் எந்த இடத்திலும் வெளிப்படுத்தப்படவில்லை. புலியோ  மானோ சிங்கமோ சிறுத்தையோ இருக்கலாம். தோலைக் குறிப்பிடாவிடில் அதை ஒரு யானையாகவும் கொள்ளலாம். இன்னதுதான் என்று வரையறுக்கப்படாதது முதலில் ஒரு குறை போல் தெரிந்தாலும் காடுகள் அழிக்கப்படும்போது பாதிக்கப்படுபவை ஒட்டுமொத்த காட்டுவிலங்குகள்தாம் என்பதால் காட்டுவிலங்குகளில் எவற்றை வேண்டுமானாலும் வாசிப்பவர் உள்ளத்தில் தோன்றும் வினாவுக்கான விடையாய்ப் பொருத்திக்கொள்ளமுடியும் என்பதே இக்கவிதையின் சிறப்பாக அமைந்துவிடுகிறது.

ஆழி சேர்ந்திடுவேனோ மனம் மகிழ்ந்து? என்ற ஆற்றின் கேள்வியில் தொனிக்கிறது கலக்கம். நெகிழியின் குவிப்பால் ஆழி சேரும் வழி அடைபட்டுக்கிடப்பதை ஆதங்கம் மேலிட ஆறு தன் மொழியில் விடுக்கும் வேண்டுகோள் மனத்தை நெகிழ்த்துகிறது.

மழைநீரின் சேமிப்பின் மகத்துவமும் உணர்த்துகிறார்.

சொட்டு நீரும் தேவையின்றி சொட்டாமல்
கொட்டும் மழைநீர் சேமிப்போம் நாளைக்காய்!

என்கிறார். நீரை சேமிக்க சொன்னதோடு நின்றுவிடாமல் செயலிலும் இறங்குகிறார்.

அடப்போம்மா
நீதான் பூமியக் காப்பாத்தப் போறியா?
என்றாள் அவள்
நான்தான் இல்லை,
நானும்தான்
என்றேன் நான்.

அவ்வளவுதான். இந்த சிறு முயற்சியை வாசிக்கும் ஒவ்வொருவரும் கையிலெடுத்தாலே போதுமே.. சிறுதுளிகள் பெருவெள்ளமாகும்போது சிறு முயற்சிகள் பெருஞ்சாதனையாகாதா என்ன? அதுதானே தன் கவிதைகளின் நோக்கமும் என்கிறார் தோழி கிரேஸ்.

இயற்கைச்சூழல் மற்றும் சமூகக் கேடுகளை உணரவும், நல்ல மாற்றம் ஏற்படவும் எங்கோ ஒரு இடத்தில் என் கவிதைகள் வழிவகுக்குமானால் அதுவே என் கவிதைகளின் வெற்றி என்கிறார் தன்னுரையில்.

அடுத்து காதல் கவிதைகள்..

காதலின் அடைமொழிகள் தேவையில்லை, அடையாளத்தைப் பறிக்காமல் இருந்தாலே போதும், அதுவே காதலாகும் என்கிறார் என்னை நானாகவே கவிதையில்.

எதனோடும் உருவகிக்க வேண்டாம்
ஏதேதோ உவமையிலும் புகழவேண்டாம்
என்னை நானாகவே விரும்பிடு – என்பாதியே!

நிபந்தனையற்ற அன்பை பறைசாற்றுகிறது எப்படியும் பிடிப்பது கவிதை.

அனைத்திற்கும் ஒரு ‘தான்’ இருக்க
நீ மட்டும் எப்படியும் எப்படியும் பிடிப்பதெப்படி?

நியாயமான கேள்விதான். நிபந்தனையற்ற அன்பைக் கூறும் இந்தக் கவிதையை ரசிக்கும் வேளையில் நிபந்தனை சொல்லும் காதலொன்றும் புருவமுயர்த்தச் செய்கிறது.

எனக்காக எதுவும் செய்வாயா?
தன்மானம் விட்டுக்கொடுக்கும் எதுவும் தவிர.

அட இதுதான் புரிதல், இதுதான் காதல் என்று கொண்டாடுகிறது மனம்.
பெண்ணுக்கு அழகு அணிகலன்களில் இல்லை, அன்புக்குரியவனின் அரவணைப்பே என்பதை இனிக்கும் இலக்கிய வரிகளால் என்ன அழகாக சொல்கிறார் இனிக்கும் பண்டிகை உன்னுடனே கவிதையில். எண்கோவை காஞ்சி, ஏழுகோவை மேகலை, மதலிகை, கண்டிகை போன்ற பண்டைய அணிகலன்கள் பற்றியும் அறிந்துகொள்ளவும் முடிகிறது இக்கவிதையின் வாயிலாய்.

முகம் புதைத்தாள் அவன் ஆகம் கவிதையின் ஆரம்ப வரிகள்

பாண்டில் ஏற்றிச் சின்மலர் சூடி
இன்னே வருவாரா என் தலைவர் என
மேன்மாடத்தில் கரங்கள் பனிப்பப்…

இந்தக் கவிதையும், செம்பருத்தி அவிழ வராரோ, தலைவன் தலைவி பாகற்காய், இனிமையிலும் இனிமை போன்ற கவிதைகளும்  இந்தக் கவிதைப் புத்தகத்தில் உள்ள கவிதைகளின் தளத்தில் இணையவியலாத தனித்துவக் கவிதைகள். முற்றிலுமாய் மாறுபட்ட தளத்தில் இயங்கும் இக்கவிதைகள் கிரேஸின் இலக்கியத்திறனுக்கு இனியதொரு சான்று. கவிதைகளின் வரிகளை வாசிக்க வாசிக்க சங்க காலக் காட்சிகள் மனத்தில் விரிந்துகொண்டே போகின்றன. கவிதைகளின் அழகையும் இலக்கிய ரசனையையும் மீறி அவ்வளவு எளிதில் நம்மால் விடுபடவியலாது.

இயற்கையை வர்ணிக்கும் கவிதைகளில் ஒரு குழந்தையின் உற்சாகமும் கைக்கொட்டிக் களிக்கும் குதூகலமும்தான் தெரிகிறது. வாசிப்போரையும் குழந்தையாய் மாற்றும் ச்சூ.. மந்திரக்கவிதைகள்…

அணில் கவிதை அசத்துகிறது. அணிலின் கீச்சொலியை வார்த்தைகளால் சொல்லமுடியுமானால் எப்படி சொல்வது? இதோ கிரேஸ் கற்றுத்தருகிறாரே.. ஸ்குவீக் ஸ்குவீக்.. என்று.

அணிலின் ஸ்குவீக் ஒலிக்கு என்ன காரணம் என்று ஆராய்கிறார். அவரோடு சேர்ந்து நாமும் அந்த தென்னங்கீற்றிலாடும் அணிலை ரசிக்கிறோம்.

கடற்கரை கிளிஞ்சல்களும் அவர் கவிதை வரிகளில் வர்ணிக்கும் வரம்பெற்று விடுகின்றன.

ஆழியின் அளவிலாச் செழிப்பை
வாழ்ந்த உயிர்களின் அடையாளத்தை
அலைகளோடு அழகாய்ச் சொல்லும்
கரைசேர்ந்த கண்கவர் ஓடுகள்!

மண்ணிற்கும் விண்ணிற்கும் காதலாம். இடையில் தூதாய் தேவதாரு மரங்களாம். கவிஞரின் கற்பனை அபாரம்.. அல்லவா!

மனை உறை புறாவின் சேவலும் பெடையும் கொண்ட சிங்காரக்காதல் கண்ணுக்குள் விரிகிறது சிங்காரக் காதல் காட்டி கவிதை வரிகளை வாசிக்கும்போது..

இறகால் தூவுதல் போலே… கவிதையில் தாய் நீராட்டும் இளந்தாய் போல என்ற வரிகளில்தான் எவ்வளவு தாய்மை…  தாயைத் தெரியும். அதென்ன இளந்தாய்? இப்போதுதான் தாயாகியிருப்பவள். ஆம். புதிதாய்ப் பிள்ளை பெற்றுவந்த தன் மகளை மனைப்பலகையில் உட்காரவைத்து பதமான வெந்நீரால் குளிப்பாட்டுகிறாள் தாய். பூரித்து நிற்கிறாள் மகள். இது ஒரு கொடுப்பினை அல்லவா? தாய்மையின் இரு வரங்களையும் ஒருசேர அனுபவிக்கும் தருணமல்லவா அது? ஆஹா.. நினைக்கையிலேயே அந்த இதம் நெஞ்சுக்குள் பரவுகிறதே.. அந்த இளந்தாயைப்போலத்தான் தென்னையும் பூரித்து தன் பசுங்கரங்களில் மழையை ஏந்தித் தன் தளிர்மேனியில் மென்மையாய் இறக்கிக்கொள்கிறதாம்… வாசிக்கையிலேயே நெஞ்சத்துள் தோன்றும் நினைவுகள் இன்பம்!

இளங்காலை நேரமது. காக்கை அழைக்கிறது, அணில் கூப்பிடுகிறது, புறா பேசுகிறது. தென்னையும் தலையை ஆட்டிக் கேட்டுக்கொண்டிருக்கிறது.  தென்னைக்கு வேறு வேலை இல்லை. கேட்டுக்கொண்டிருக்கிறது. இப்படி நாமும் இயற்கையை ரசித்துக்கொண்டிருந்தால் இன்றைய பொழுது என்னாவது? கவிஞரை அங்கே குக்கர் அழைக்கிறது.. ரசனையும் கடமையுமாய் கலந்து புலர்கிறதாம் கவினுறு காலைகள்.. என்ன அற்புதமான ரசனை!

சமூக அக்கறையும், சமூகத்தின் வஞ்சமுகம் குறித்த விழிப்புணர்வையும், வக்கிரமுகம் குறித்த சாடல்களையும் முன்வைக்கின்றன சமூகம் குறித்த அவரது கவிதைகள். சமூகத்தின் அவலங்களும் அலட்சியங்களும் அவற்றில் சுட்டிக்காட்டப்படுகின்றன.

நாளைய சமுதாயம் கவிதையில் எப்படியெல்லாம் இன்றைய துளிர்கள் தவறான போக்கில் திசைதிருப்பப்படுகிறார்கள் என்பதை உதாரணங்களோடு விளக்குகிறார். நாமும் அந்தப் பட்டியலில் இருக்கிறோமா என்று நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ளவேண்டிய தருணமிது.

எது உண்மையான திருநாள் என்று கிரேஸ் சொல்வதில் இருக்கும் உண்மையை மறுப்பார் உண்டா?

சமூகமெனும் காட்டுக்கான விருட்சங்களுக்கு விதை தூவப்பட்டு வளர்ப்பதென்னவோ வீட்டுக்குள். இந்த துளிர் விடும் விதைகள் நல்லமுறையில் அன்பெனும் நீரூற்றப்பட்டும் நற்பண்புகள் என்னும் உரமிடப்பட்டு இனிமையான குடும்பச்சூழல் என்னும் வேலியிடப்பட்டு வளர்க்கப்பட்டால்தானே நல்லதொரு நேரிய விருட்சங்களாய் நாளை வளரக்கூடும். பெற்றவர்கள் செய்யும் பிழைகளுள் பிரதானமானது மற்றக்குழந்தைகளோடு தங்கள் குழந்தைகளை ஒப்பிட்டுப் பழிப்பது. அதைச் சுட்டும் கிரேஸின் வரிகள்

அவளைப் போல ஆடு
இவனைப் போல பாடு
அவனைப் போல படி
இவளைப் போல விளையாடு
அவனைப் போல அது செய்
இவளைப் போல இது செய்
விளங்காமல் விழித்த குழந்தை
விளம்பியது விழிவிரித்து
நானாக நான் இருத்தல் எப்பொழுது?
நானாக நான் இருத்தல் பிழையா?

குழந்தையின் பிஞ்சு நெஞ்சம் கேட்கும் கேள்வியைப் பெற்றோர் இனியாவது புரிந்துகொண்டு தங்கள் பேராசைகளைக் கைவிட்டு குழந்தைகளை குழந்தைகளாய்ப் பார்க்கவேண்டும்.

தாய்மையின் சிறப்பை சிலாகிக்கும் கவிதை சிலிர்ப்பூட்டுகிறது. மழலை உண்ணும் அழகோ மனம் நிறைக்கிறது.

படைத்திடும் அனைவருக்கும்
படைப்பாற்றல் அனைத்துமாகும்

என்கிறார் படைப்பு கவிதையில். நிரூபிக்கிறார் கட்டைவிரலும் ஆட்காட்டி விரலும் கவிபாடும் கவிதையில்.

கையெழுத்தைத் தொலைத்துவிட்டேனே என்று கவிமனம் கதறும் கவிதை வாசிக்கும் நம்மையும் சுருக்கென்று தைக்கிறது.

வாழ்க்கை பற்றிய கவிதைகளில் வெற்றிக்கான பாதையையும் காட்டுகிறார். வாழ்வு சுகப்படும் சூத்திரமும் காட்டுகிறார். கலங்கச் செய்யும் காலத்தின் கணக்கையும் கண்முன்னால் காட்டுகிறார்.

சுருக்கமாகத் துன்பங்கள் தீமைகள் எல்லாம்
தாமரை இலைநீராக அகற்றும் மனம் வேண்டும்

என்று சொல்லி வாழ்வின் இன்பதுன்பங்களை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தையும் காட்டுகிறார்.

மொத்தத்தில் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் வெகு அழகாக இக்கவிதை நூலில் அடக்கிக்காட்டியுள்ளார். தமிழின் இனிமையும், சாரமும் கொண்டு இயற்கை சார்ந்த கவிதைகளில் ஈர்ப்பும், சூழல் சார்ந்த கவிதைகளில் சுதாரிப்பும், காதல் சார்ந்த கவிதைகளில் களிப்பும், வாழ்க்கை சார்ந்த கவிதைகளில் உளத்தெளிவுமாக வசீகரிக்கிறார் அன்புத்தோழி கிரேஸ். வாழ்த்துகள் கிரேஸ்.