7 July 2011

அடையாளம் தவிர்ப்பவன்



அடையாளங்களை அப்புறப்படுத்துவதே
அவனது தவிர்க்க இயலா பொழுதுபோக்கு.
பெயரினை விரிக்கிறான், சுருக்குகிறான்,
புதிய பெயர்களால் தன்னை அழைத்துக்கொண்டு
பழகியவர்களை பீதியுறச் செய்கிறான்.

எந்தவொரு அடையாளத்துடனும்
எவரும் தன்னை அடையாளப்படுத்துவதை
அவன் துரும்பளவும் விரும்பவில்லையென்பதாய்
தன் விநோதச் செயல்களுக்குக் காரணம் சொல்லி
பரிகாசத்தையும் பரிதாபத்தையும்
பரிசிலாய்ப் பெற்றுக்கொள்கிறான்.

சிகை அலங்காரம் முதல்
புகை பிடிக்கும் லாவகம் வரை
தனக்கென்று எதையும் தக்கவைப்பதில்லை.
அபாரம் என்னும் அடைமொழிகளை
அவன் ரசிப்பதுமில்லை,
சகிக்கவில்லையென்னும் முகச்சுளிப்பையும்
அவன் பொருட்படுத்துவதில்லை.

வானளாவிப் பறந்தாலும்,
வட்டமிட்டுக் கரணமடித்தாலும் ,
பக்கமிருக்கும் மரக்கிளையில் சிக்கி,
கிழிபட்டுக் காற்றாடாதபோதும்
காற்றாடியென்றே குறிப்பிடுதல் போல்....

பெயரோ... தொழிலோ...
தோற்றமோ... தோரணையோ... ஏதோவொன்று
அத்தியாவசியமாய் தேவைப்படுகிறது
எல்லோருக்கும் அவனைக் குறிப்பதற்கு.

அடையாளங்களை அடியோடு வெறுத்தவன்,
இப்போது பரவலாக அறியப்படுகிறான்,
தனக்கெனவோர் அடையாளத்தைத்
தக்கவைத்துக்கொள்ளாதவன் என்னும்
நிரந்தர அடையாளக்குறிப்போடு.

8 comments:

  1. தனக்கெனவோர் அடையாளத்தைத்
    தக்கவைத்துக்கொள்ளாதவன் என்னும்
    நிரந்தர அடையாளக்குறிப்போடு.

    நிதர்சனமான கவிதைக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. எதைச் செய்தாலும் வித்தியாசமாகச் செய்வது
    என்ற ஒரே ஒரு குறிக்கோளுக்காக
    அனைத்தையும் இழந்த சில பிரபலங்களை
    இந்தக் கவிதை ஞாபகப் படுத்திப்போகிறது
    சூப்பர் பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அடையாளமில்லாமல் போவது என்பது நிலச்சுமையென வாழ்ந்திடல் என்று பாரதி சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது. ஆழமான சிந்தனை. எனக்கும் நிறைய சிந்தனை தருகிறது. சிறப்புமிக்க ஒன்று.

    ReplyDelete
  4. நான் வித்தியாசமானவன் என்று சொல்லிச் சொல்லியே வித்தியாசமாகப் போனவனின் கதையாக இருக்கிறது கவிதை !

    ReplyDelete
  5. //நிதர்சனமான கவிதைக்குப் பாராட்டுக்கள்.//

    பாராட்டுக்கு நன்றி இராஜராஜேஸ்வரி.

    ReplyDelete
  6. //எதைச் செய்தாலும் வித்தியாசமாகச் செய்வது
    என்ற ஒரே ஒரு குறிக்கோளுக்காக
    அனைத்தையும் இழந்த சில பிரபலங்களை
    இந்தக் கவிதை ஞாபகப் படுத்திப்போகிறது
    சூப்பர் பதிவு தொடர வாழ்த்துக்கள் //

    வாழ்த்துக்கும் விமர்சனத்துக்கும் நன்றிங்க ரமணி.

    ReplyDelete
  7. //அடையாளமில்லாமல் போவது என்பது நிலச்சுமையென வாழ்ந்திடல் என்று பாரதி சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது. ஆழமான சிந்தனை. எனக்கும் நிறைய சிந்தனை தருகிறது. சிறப்புமிக்க ஒன்று.//

    பாரதியை நினைவுபடுத்தியமைக்கும் கருத்துக்கும் நன்றி சாகம்பரி.

    ReplyDelete
  8. //நான் வித்தியாசமானவன் என்று சொல்லிச் சொல்லியே வித்தியாசமாகப் போனவனின் கதையாக இருக்கிறது கவிதை !//

    அதேதான் ஹேமா. கருத்துக்கு நன்றி.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.