10 April 2011

விடைபெறவியலா வினாக்கள்



உன் விபரீதச் செயல்களுக்கான
மூலகாரணம் பற்றிய வினாக்களுக்கு
நீ ஒருபோதும் முக்கியத்துவம் தருவதேயில்லை!

பின்விளைவுகளெனத் தொடரும்
முறிந்துபோன மனங்களின் எண்ணிக்கை பற்றியோ
முடங்கிப்போன செயல்பாடுகளின் நல்லாதாயங்கள் பற்றியோ
மீண்டுமொரு விவாதத்தை முன்வைப்பதை
முற்றிலும் நீ ஏற்பதுமில்லை!

உன்னிடம் எழுப்பப்பட்ட வினாக்கட்டடங்களை
நீ எட்டி உதைத்துத் தரைமட்டமாக்கியிருக்கிறாய்,
எச்சில் உமிழ்ந்து ஏளனம் செய்திருக்கிறாய்,
ஏவியவர் மேலேயே எடுத்தெறிந்து வீசியிருக்கிறாய்!
ஆனால் அவற்றுக்கான விடைகளை
என்றுமே எடுத்துரைத்ததில்லை!

நீ விடைகள் அளிக்கவிரும்பாத
வினாக்கள் பற்றிய கவலை எனக்கெப்போதும் உண்டு.

உன்னிடம் விடைபெற முயன்று பிரியாவிடைபெற்றவர்களின்
விசேசப்பிரதிநிதியாக உன்முன் நிற்கிறேன்,
எதுவும் வீண்போகவில்லை,
உன் விநோதகுணம் பற்றி விவரமாகவே அறிந்துகொண்டேன்!

பதில் தரவியலாக் கேள்விகள் எதுவும்
உன் முன்வைக்கப்படவில்லை என்பதை
மற்றவர்களைப்போலவே நீயும் அறிந்திருக்கிறாய்!

பதில் சொல்வதன் மூலம்
உன் ஆழ்மனக்கிடக்கைகளை, உன் அந்தரங்கக் கிடங்கை,
உன் அனர்த்தம் நிறைந்த புரிதல்களை,
மூச்சுவிடத்திணறும் உன் குறுகிய மனவோட்டங்களை...
அடுத்தவர் அறிந்துகொள்வதைத் தவிர்க்கிறாய்!

இதுபோன்ற அளவீடுகளால் உன் சுற்றுப் பரிமாணங்கள்
அனுமானிக்கப்பட்டு அறுதியிட்டுரைக்கப்படுவதை
அடியோடு வெறுக்கிறாய்!

இருளுக்குள் ஒளியும் நிழல்போல
பாதுகாப்பாய் உன்னை... உன் இருப்பை...
நிலைநிறுத்திக்கொள்ளப் போராடுகிறாய்!

அகோரக் குணங்காட்டும் கத்தல்களாலும்
ஆவேசம் மென்றுதின்னும் மெளனத்தாலும்
சுள்ளென்று காட்டும் முகத்திருப்பங்களாலும்
சூழ்ந்து நிற்கும் உறவுகளைச் சோர்வுறச்செய்கிறாய்!

மலச்சிக்கல் கொண்டவனை விடவும்
அதீதமான அசெளகரியத்துடன்
மனச்சிக்கல் கொண்டு தவிப்புடன் நெளிகிறாய்!

நிர்வாணமாய் நிற்பவனிடத்தில் பிடுங்க எதுவுமற்று
விரக்தியுடன் திரும்ப யத்தனிக்கிறேன்,
நீயோ வழக்கத்துக்கு மாறாக
என்னிடம் எதையோ கேட்டு என் பதிலுக்காய்
என் முகம்பார்த்துக் காத்திருக்கிறாய்!

10 comments:

  1. மலச்சிக்கல் கொண்டவனை விடவும்
    அதீதமான அசெளகரியத்துடன்
    மனச்சிக்கல் கொண்டு தவிப்புடன் நெளிகிறாய்! #

    நான் மிகவும் ரசித்த வரிகள் இவை. கவிதை நன்றாக இருக்கிறது

    ReplyDelete
  2. கேள்விகளும் பதில்களும் புதிர்போல.அது கேட்பவரும் கேட்பவரையும் பொறுத்தது.எங்களால சொல்ல முடியாதுப்பா !

    ReplyDelete
  3. Anonymous12/4/11 03:33

    paa koorvaiyaaka vanthirukkirathu.

    But the theme is unreadable.

    ReplyDelete
  4. நீங்களே கேள்வி கேட்டு நீங்களே பதில் சொல்லிக்குங்க..

    ReplyDelete
  5. @கெளதமன்

    உங்கள் ரசனைக்கு நன்றி.

    @ஹேமா

    உண்மைதான். கேள்வியையும் கேட்பவரையும் பொறுத்து நிலைமை மாறக்கூடும். நன்றி ஹேமா.

    @ அமலன்.

    புரியாத செய்திகள் எதுவுமில்லை. பதில் சொல்ல இயலாதவனின் நிலையைப் பற்றி சொல்லியிருக்கிறேன்.வருகைக்கு நன்றி.

    @சி.பி.செந்தில் குமார்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  6. முட்டு சந்தின் முடிவில் சுவற்றில் முட்டிக் கொள்ளத்தான் முடியும் வழி கிட்டாது.

    ReplyDelete
  7. சாகம்பரி said...
    //முட்டு சந்தின் முடிவில் சுவற்றில் முட்டிக் கொள்ளத்தான் முடியும் வழி கிட்டாது.//

    கருத்துக்கு நன்றிங்க சாகம்பரி.

    ReplyDelete
  8. சாகம்பரி said...
    //முட்டு சந்தின் முடிவில் சுவற்றில் முட்டிக் கொள்ளத்தான் முடியும் வழி கிட்டாது.//

    இப்படிப்பட்டவர்களிடம் பதிலை எதிர்பார்ப்பது முட்டுச் சந்தில் முட்டிக்கொள்வது போலத்தான் என்கிறீர்களா? சரியாகவே கணித்திருக்கிறீர்கள். நன்றி சாகம்பரி.

    ReplyDelete
  9. மலச்சிக்கலை விட மனச்சிக்கல் சிரமம் தான்மா

    ReplyDelete
    Replies
    1. புரிதலுடைய கருத்துக்கு மிகவும் நன்றி கீதா.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.