17 October 2016

தான்தோன்றிப் பூக்கள்


வித்திடாமல்..
விதை தூவாமல்
நிலங்கொத்திவிடாமல்..
நீர்த்துளி வேண்டாமல்..
உரமேதும் கேளாமல்
உறுவேலி காவாமல்
களையெனவும் காட்டுத்தழையெனவும்
விளைந்தெங்கும் வளர்ந்து செழித்து
மண் மறைத்து மலர்ந்து சிரித்து
கண் நிறைக்கும் கவின்மலர்கள்
pic 1 - capeweed flowers
pic 2 - scarlet pimpernel flowers
pic 3 - bindweed flowers
pic 4 - wild mustard flowers pic 5 -sticky nightshade flowers
pic 6 - purple top flowers
pic 7 - ribwort plantain flowers
pic 8
paterson's curse flower (purple)
bird's foot flower (yellow)
common wireweed flower (pale yellow)
tick clover (pink)pic 9 - some wild grass headspic 10
onion weed flower (top left)
black nightshade (top right -மணித்தக்காளிப்பூ)
whorled rosinweed flower (yellow)
scurvy weed flower (blue)

இணையத்தின் உதவியால் பூக்கள் மற்றும் செடிகளின் பெயர்களை ஓரளவு தேடிக்கண்டுபிடித்து எழுதியுள்ளேன். எவரேனும் எதுவேனும் தவறெனக் காணின் திருத்தக் கோருகிறேன். நன்றி.

10 October 2016

மார்சுபியல் மூஞ்சுறு - ஆஸ்திரேலியாவின் அதிசயம் 19மார்சுபியல் என்றால் வயிற்றில் பை உள்ள விலங்கினங்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும். இத்தகைய விலங்குகளின் குட்டிகள் கருநிலையிலேயே பிறந்து தாயின் வயிற்றுப்பையைத் தேடித் தஞ்சமடைந்து, பைக்குள் பாலைக்குடித்தபடி முழுவளர்ச்சி அடைகின்றன என்று முன்பே பார்த்தோம். ஆஸ்திரேலியாவின் தனித்துவமிக்க மார்சுபியல் விலங்குகளின் வரிசையில் இன்று நாம் காணவிருப்பது மார்சுபியல் மூஞ்சுறு (marsupial mole). மூஞ்சுறு இனத்தில் கூடவா மார்சுபியல் என்று நீங்கள் வியப்பது தெரிகிறது.. தொடர்ந்து வாசியுங்கள்.. இன்னும் வியப்புகள் காத்திருக்கின்றன.ஆஸ்திரேலியாவின் சில இடங்களில் கிடைத்துள்ள புதைபடிமங்களைக் கொண்டு, ஐந்து கோடி ஆண்டுகளாக ஆஸ்திரேலிய மண்ணில் நிலைபெற்றுவாழும் உயிரினமாகக் கருதப்படும் மார்சுபியல் மூஞ்சுறுவின் வாழ்க்கை ஒரு  மர்மம்இவற்றைப் பற்றிப் போதுமான தகவல்கள் கிடைக்காத நிலையிலும் இதுவரை கிடைத்திருக்கும் தகவல்கள் வியப்பில் ஆழ்த்துவது உண்மை.  இருட்டு உலகில் குருட்டு வாழ்க்கை வாழும் மூஞ்சுறுகள் என்று சொன்னால் மிகவும் பொருத்தமாக இருக்கும். பயனற்ற எதுவும் காலப்போக்கில் மறைந்துபோகும் என்னும் பரிணாமவளர்ச்சிவிதிப்படி, கண்களிருந்தும் பார்வையில்லாத பரிதாபத்துக்குரிய ஜீவன்கள் இவை. ஆம் இவற்றின் பெரும்பான்மையான வாழ்க்கை மண்ணுக்குள்ளேயே முடிந்துவிடுவதால் கண்களின் லென்சுகள் செயலிழந்துபோனதோடு மெல்லிய சவ்வினால் கண்களும் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டன.   

ஆஸ்திரேலியாவின் மத்தியில் சுட்டுப்பொசுக்கும் மணற்பாங்கான பாலைப்பகுதியில் வசிக்கும் இந்த மார்சுபியல் மூஞ்சுறுகள், எலிகளைப்போல நிரந்தர வளைகளில் வசிப்பதில்லை. தளர்வான மணற்பரப்பு என்பதால் அவை வளையைத் தோண்டிக்கொண்டு முன்செல்லும்போதே பின்னால் மண் சரிந்து வளையை மூடிவிடுகிறது அல்லது தானே பின்னங்கால்களால் மண்ணைத்தள்ளி மூடிவிடுகிறது. அதனால் அவற்றின் நிலையான இருப்பிடத்தைக் கண்டறிவதென்பது அவ்வளவு சுலபமில்லை. பாலையில் மழை பெய்த பிறகு அவற்றின் தடங்களைக் கொண்டு ஓரளவு அவற்றின் இருப்பை அறியமுடியும். சரி, இவற்றை உயிரியல் பூங்கா போன்ற இடங்களில் வைத்து வளர்த்து அவற்றின் வாழ்க்கை முறையை அறிந்துகொள்ளலாம் என்றால் செயற்கையான சூழலில் ஒரு மாதம் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் எல்லாம் இறந்துபோய்விடுகிறதாம்.மொழுக்கட்டையான முகம், தடித்த இளஞ்சிவப்புநிறத் தோல் போர்த்திய முகவாய்ப்பகுதி, சிறுகீறல் விழுந்தாற்போன்ற சின்னஞ்சிறு மூக்குத்துவாரங்கள், ரோமத்துக்குள் மறைவாய் கண்ணுக்குத்தெரியாத குட்டித் துவாரங்களாய் மடலற்றக் காதுகள், சுமார் 12-16 செமீ நீளத்தில் 40-60 கிராம் எடையில்தொளதொளப்பான பர்ஸ் போன்ற உருளை வடிவ உடம்பு,  உடல் முழுவதும் மங்கியவெள்ளை நிற, பளபளப்பான ரோமங்கள், குட்டையான கால்கள்,  1-2  செமீ அளவுக்கு குட்டியூண்டு வால் இதுதான் மார்சுபியல் மூஞ்சுறுவின் மொத்த வடிவம்.  உலகின் பிற பகுதிகளில் வாழும் மற்ற மூஞ்சுறு இனத்துக்கும் இதற்கும் பெரிய அளவில் உருவ வித்தியாசம் இல்லை என்றாலும் மார்சுபியல் என்னும் வயிற்றுப்பையுடன் கூடிய இனம் என்பதே இதன் தனித்துவம்.

வளைவாழ் மார்சுபியல் உயிரியான வாம்பேட் போன்றே இதற்கும் வயிற்றுப்பையின் திறப்பு பின்னோக்கியே  உள்ளது. அப்போதுதானே வளைதோண்டும்போது, மண், பைக்குள் போய் குட்டியைப் பாதிக்காது. மண்ணைப் பறிப்பதற்கு ஏதுவாக இதன் முன்னங்கால் விரல்களில் இரண்டு அகன்ற பெரிய வலிய நகங்களும், பறித்த மண்ணைப் பின்னே தள்ள பின்னங்கால் விரல்களில் மூன்று சிறிய வலிய நகங்களும் அமைந்துள்ளன. தொளதொளப்பான உடலிருப்பதால் வளை தோண்டும் வேகத்தில் கழுத்தெலும்பு முறிந்துவிடாதா… அந்தக் கவலை நமக்கு வேண்டாம். ஏனெனில் இதற்கு கழுத்தே கிடையாது. தலை முதுகெலும்போடு மிகவும் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது ஒரு சிறப்பு.  பூச்சியுண்ணியான இந்த மார்சுபியல் மூஞ்சுறுகளின் பிரதான உணவு வண்டுகளின் லார்வாக்களும் கம்பளிப்புழுக்களும். அவை தவிர தவளை, ஓணான் போன்ற சிற்றுயிரிகளையும் பிடித்துத் தின்னும். மார்சுபியல் மூஞ்சுறு மண்ணுக்குள் வாழ்ந்தாலும் தரைக்கு மேலே நகரும் சிற்றுயிர்களின் சிறு அதிர்வையும் உணர்ந்து மேலே வந்து அவற்றைப் பிடித்துத் தின்னும்.

இவற்றின் இனப்பெருக்கக்காலம் நவம்பர் மாதம். ஒரு ஈட்டுக்கு இரண்டு குட்டிகளை ஈனும். வழக்கம்போல குட்டிகள் மெல்ல ஊர்ந்து தாயின் வயிற்றுப்பைக்குள் சென்றுவிடும். பாலைக்குடித்தபடி வளரும் குட்டிகள் பையை விட்டு வெளிவர ஆரம்பித்ததும் தாய் மண்ணுக்குள் ஆழமான இடத்தில், இடிந்துவிழாதபடி வலுவான வளை தோண்டி குட்டிகளை அங்கே விட்டு குறிப்பிட்டக் காலத்துக்குப் பாதுகாக்கும்.

ஆஸ்திரேலியாவின் தெற்குப் பகுதியில் வாழும் மார்சுபியல் மூஞ்சுறுகள் இட்ஜாரிட்ஜாரி என்றும், வடக்குப் பகுதியில் வாழும் மார்சுபியல் மூஞ்சுறுகள் கக்கராட்டுல் என்றும் அந்தந்தப் பகுதியைச் சார்ந்த பூர்வகுடி மக்களால் குறிப்பிடப்படுகின்றன.

தென்னக மார்சுபியல் மூஞ்சுறு வாழ்பகுதி.

பொதுவாகவே மூஞ்சுறுகளின் பளபள ரோமத்தோலுக்கு உலகச்சந்தையில் நல்ல கிராக்கி. ரகசிய வாழ்க்கை வாழும் இந்த மார்சுபியல் மூஞ்சுறுகளும் பேராசை பிடித்த சந்தைவியாபாரிகளிடமிருந்து தப்பமுடியவில்லை என்பதுதான் சோகம். பூர்வகுடி மக்களுக்கு இதை வேட்டையாடிப் பிடிக்கும் வித்தை தெரியும் என்பதால் ஐரோப்பியர்களும் ஆப்கானிய ஒட்டக வியாபாரிகளும் அம்மக்களை அணுகி பேரம் பேசி தங்கள் வியாபாரத்தைப் பெருக்கினர். போதுமான உலக அனுபவம் அறியாத அம்மக்களால் 1900 முதல் 1920 வரை ஆயிரக்கணக்கான மூஞ்சுறுகள் வேட்டையாடப்பட்டன. அருகிவரும் உயிரினங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இவற்றின் தற்போதைய எண்ணிக்கை என்னவென்று துல்லியமாகத் தெரியவில்லை.. மண்ணுக்கு வெளியே காண்பதும் அபூர்வமான காட்சியாகிவிட்டது.

இந்நிலையில் தற்போது ஆய்வாளர்கள், அனங்கு பூர்வகுடி பிரிவினர் உதவியைக் கொண்டு மார்சுபியல் மூஞ்சுறுவின் இருப்பிடத்தைக் கண்டறியும் உத்தியைக் கற்று அவற்றின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். 


மார்சுபியல் மூஞ்சுறு மண்ணைக்கிளறி உட்செல்லும் காட்சி...  
(படங்களும் காணொளியும் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவையே.)